இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு பணி
கூடலூர்: -கூடலூர் நாடுகாணி, தேவாலா வன பகுதிகளில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கூடலூர் வனக்கோட்டம் தேவாலா, நாடுகாணி வனச்சரக வனப்பகுதிகளில், இரைக்கொல்லி (உன் உண்ணி) பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள், நேற்று முன்தினம், துவங்கியது. இதற்கான, பயிற்சி முகாம் ஜீன்பூல் தாவரம் மையத்தில் நடந்தது. முகாமுக்கு, கூடலூர் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து, இரைக்கொல்லி பறவைகள், இனங்கள், வாழ்வியல், அவைகளை கணக்கெடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் 4 பகுதிகளில் நேற்று முன்தினம், மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 வரை வனப்பகுதிகளில் நடந்து சென்று இரைக்கொல்லி பறவை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று, காலை 8:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரையும் கணக்கெடுப்பு நடந்தது. இப்பணியில், குழுவுக்கு ஐந்து பேர் வீதம், 20 பேர் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'கணக்கெடுப்பு பணியின் போது ஆந்தை, பருந்து, கழுகு போன்ற இரைக்கொல்லி பறவைகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன், விபரங்கள் ஆய்வு செய்து, அதன் இனங்கள் குறித்த விவரம் தெரிய வரும்.' என்றனர்.