பாலக்காடு: பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ.வை சேர்ந்த ஸ்மிதேஷ் பதவியேற்றார். கேரளாவில், உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்து, கடந்த 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பாலக்காடு நகராட்சியில், மொத்தம் உள்ள, 53 இடங்களில், பா.ஜ. 25 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், மா.கம்யூ., கூட்டணி 9 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு, 27 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 21ம் தேதி கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. பா.ஜ., வேட்பாளராக ஸ்மிதேஷ், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஷாஜோ ஜோன், மா.கம்யூ., கூட்டணி வேட்பாளராக ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர். இதில், 25 ஓட்டுகள் பெற்று பா.ஜ., வேட்பாளர் ஸ்மிதேஷ் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணைத் தலைவருக்கான தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக பேபி, காங்., கூட்டணி வேட்பாளராக ரிஸ்வானா பீகம், மா.கம்யூ., கூட்டணி வேட்பாளராக குமாரி போட்டியிட்டனர். இத்தேர்தலில், 25 வாக்குகள் பெற்று பா.ஜ., வேட்பாளர் பேபி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இருவரும் பதவிப் பிரமாணம் செய்து பதவியேற்றனர். ஓட்டெடுப்புக்கு தாமதமாக வந்த காங்., கவுன்சிலர் பிரசோபை, ஓட்டுப்பதிவு செய்ய பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அனுமதி மறுக்கப்பட்டது.