நோயை தடுக்கும் பிளீச்சிங் பவுடர் தண்ணீரில் கரையும் அவலம்; அலுவலக அறையில் தண்ணீரில் கரையும் அவலம்
பந்தலுார்; பந்தலுாரில் மக்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட 'பிளீச்சிங்' பவுடர் நகராட்சி அலுவலக வளாக அறையில் தண்ணீரில் கரைந்து வீணாகி வருகிறது. குடிநீர் கிணறுகள் மற்றும் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தவும்,பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், உள்ளாட்சி அலுவலகங்களுக்கு ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிளீச்சிங் பவுடர் பெறப்படுகிறது. அதில், ஏற்படும் செலவு கணக்கு குறித்து ஆய்வு ஏதும் செய்ய முடியாத சூழலில் பல குளறுபடிகள் நடக்கிறது. இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட பிளீச்சிங் பவுடர் மூட்டைகளாக அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் நிறைந்து பிளீச்சிங் பவுடர் முழுவதும் தண்ணீரில் கரைந்து வீணாகி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் பெறப்பட்ட பிளீச்சிங் பவுடர் வீணாகி வருவது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. மக்கள் பயன்பாட்டிற்கும் தருவதில்லை. எனவே, இது போன்ற வீண் விரயங்களை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். நகராட்சி மேலாளர் வசந்த் கூறுகையில்,''இந்த அறையில் உள்ள பிளீச்சிங் பவுடர் பழையது. அதனை பயன்படுத்துவதில்லை,'' என்றார்.