சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 2வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட மலர்கள் பூத்து குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 2வது சீசனுக்காக கடந்த ஜூலை மாதம், 1.19 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பூங்கா பணியாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில், 'மெரிகோல்டு, சால்வியா, காஸ்மாஸ்' உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கி வருகின்றன. தற்போது வடமாநில மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரியில், 2ம் சீசன் சூடு பிடித்துள்ள நிலையில், குன்னுாரில் பெய்த மழையால், பூங்காவில் பல வண்ண மலர்கள் பூத்துள்ளன. இதனை காண, நவ., மாத இறுதி வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் வரும்,' என்றனர்.