புத்தக வாசிப்பு ஒரு தவம்; நிரஞ்சன் பாரதி பேச்சு
ஊட்டி : ''புத்தக வாசிப்பு என்பது ஒரு தவம்; மாணவர்கள் புத்தகங்கள் விரும்பி படிக்க வேண்டும்,''என, நிரஞ்சன் பாரதி அறிவுறுத்தினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி பங்கேற்று பேசியதாவது:மாணவர்கள் அடுத்த நிலைக்கு போக பாட புத்தகங்களை நாள்தோறும் படிக்க வேண்டும். ஆனால், நீங்கள் உயர்ந்த நிலைக்கு போக வேண்டும் என்றால் மற்ற புத்தகங்களையும் விரும்பி படிக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் மதிப்போடு இருக்க புத்தகங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.மாணவர்கள் மத்தியில் திறமைகள் கொட்டி கிடக்கிறது. வருத்தம் என்னவென்றால், திறமை இருக்கும் அளவுக்கு உங்களுக்கு பொறுமை இருக்கின்றதா என்பது மிக பெரிய கேள்வி. வாசிப்பு பழக்கம் என்பது இன்றைக்கு மிக குறைவாக மாறிவிட்டது. புத்தகங்களால் செய்ய கூடிய மேஜிக்கை கூகுளால் செய்ய முடியாது. புத்தகம் வாசிப்பு தவம்
புத்தக வாசிப்பு என்பது ஒரு தவம். இப்போது, 'வாட்ஸ் ஆப், முகநுால், டுவிட்டர்' இன்னும் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் மட்டுமே உங்களுடைய உலகமாக உள்ளது.சமூக வலைத்தளங்களில் 'டிரெண்டிங்கில்' இருப்பதை விட சமுதாயத்தில் நீங்கள் எப்போதும் ஒரு 'டிரெண்டிங்கான' நபராக இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். அதற்கு முக்கிய காரணியாக இருப்பது புத்தகங்கள் தான். நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், கனவு நனவாக வேண்டும் என்றால் மனதில் உறுதி வேண்டும். அதற்கு புத்தகங்கள் வழிகாட்டும் இவ்வாறு, அவர் பேசினார்.