பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் அவசியம்: பிரசவித்த தாய்மார்களுக்கு சுகாதார துறை விழிப்புணர்வு
ஊட்டி: 'பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் சிசு மரணத்தை குறைப்பதற்கும், மகப்பேறு மரணத்தை தடுப்பதற்கும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிறைகள் குறித்து, சுகாதார துறை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.அதில், 'பெண்கள் கர்ப்பம் உறுதி செய்தவுடன் கர்ப்பத்தை சுயமாகவோ அல்லது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, 12 வாரங்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். 'போலிக் அமில' மாத்திரைகளை மூன்று மாதங்கள் வரை தினமும் ஒரு மாத்திரை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ரண ஜன்னி தடுப்பூசிகள் இருமுறை ஒரு மாத இடைவெளியில் செலுத்தி கொள்ள வேண்டும். ஆய்வக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஒரு முறையாவது, 12 வாரங்களுக்குள் செய்திருக்க வேண்டும். நான்கு மாதம் முதல் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரை, 4 மாதம் முடிவில் ஒரு முறை மட்டும் உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார் களுக்கான வழிமுறைகள்
ஒரு நாளைக்கு, 2 முதல் 3 லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த குடிநீரை பருக வேண்டும். சிக்கலான கர்ப்பிணி தாய்மார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி அங்குள்ள மருத்துவரின் ஆலோசனை படி, தக்க நேரங்களில் தவறாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பின் உள்ள காலத்தில் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்படுகிறது. சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ' கர்ப்பிணி தாய்மார்களுக்கு, தினமும், 6:00 முதல் 8:00 மணி வரை உறக்கம் அவசியமானது. குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. குழந்தை பிறந்து, 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் தருவது மட்டுமல்லாமல் எளிதாக விழுங்க கூடிய உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். 2 வயது முடியும் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் போன்ற விழிப்புணர்வை மாவட்டம் முழுவதம் ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.