வனத்தை ஒட்டி எரிக்கப்படும் மூங்கில்கள்; காற்றில் தீ பரவும் அபாயம்
கூடலுார்: கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம், வனத்தை ஒட்டி காய்ந்த மூங்கில்கள் எரிக்கப்படுவதால் வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடலுார் வனப்பகுதியில் கோடையில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், வனத்தீ ஏற்பட்டால் அவை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். மேலும், கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பயணிப்பவர்களால் அதனை ஒட்டிய வனப்பகுதியில் செயற்கை வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தொரப்பள்ளி, மாக்கமூலா பகுதிகளில் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை அப்பகுதியில் காய்ந்த மூங்கில்களை சிலர் எரித்துள்ளனர். தொடர்ந்து, தீ கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் வனத்தீ தவிர்க்கப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பகுதியில், வானத்தை ஒட்டி உள்ள காய்ந்த மூங்கில்கள் எரிக்கப்படுவதால், வனத்தீ அபாயம் உள்ளது. எனவே, காய்ந்த மூங்கில்கள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,'என்றனர்.