கைதி மீது தாக்குதல்: சிறை காவலர் மீது வழக்கு
கூடலுார், : கூடலுார் கிளை சிறையில் கைதியை தாக்கிய புகாரில், சிறை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கூடலுார் தேவர்சோலை பாடந்துறை பகுதியை சேர்ந்தவர் நிஜமுதீன்,33. கடந்த மாதம் தேவர்சோலை போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 300 கிராம் கஞ்சா, 2.25 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, அவரை கூடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில், அவருக்கும் சிறை போலீசாரும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறை போலீசார் நிஜாமூதீனை தாக்கியதில், அவர் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவம் குறித்து, கூடலுார் மாஜிஸ்திரேட் சசின்குமார் நேரில் விசாரணை செய்தார். போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். புகார் தொடர்பாக, கூடலுார் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகியோர் கடந்த மாதம், 16 தேதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கூடலுார் மாஜிஸ்திரேட் உத்தரவுபடி, சிறை காவலர் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுஉள்ளனர்.