ஊட்டி வந்தார் முதல்வர்; இன்று முதுமலை பயணம்
ஊட்டி : கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக, மாநில முதல்வர் ஸ்டாலின் ஊட்டிக்கு வந்தார்.ஊட்டியில் 127 வது மலர் கண்காட்சி வரும் 15ல் துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சி மற்றும் சில உள்ளூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில், 5 நாள் சுற்றுப்பயணமாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டி வந்தார். கோத்தகிரி குஞ்சப்பனையில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் வரவேற்றனர். கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், கட்சியினர் வரவேற்பு அளித்து புத்தகங்களை வழங்கினர். மதியம், 2:00 மணியளவில் ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையை வந்தடைந்தார்.இன்று (13ம் தேதி) மாலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். அங்கு, யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள, 44 வீடுகளை திறந்து வைத்து, வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார்.'எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற 'ஆஸ்கார்' விருது பெற்ற ஆவண படத்தில் நடித்த, யானைகள் மற்றும் பாகன் தம்பதி பெள்ளி, பொம்மன் ஆகியோரை சந்திக்க உள்ளார். முன்னெச்சரிக்கையாக, முதுமலையில் முதல்வர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.முதுமலை வனத்துறையினர் கூறுகையில், 'முதல்வர் வருகையை ஒட்டி நாளை (இன்று) மாலை, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்றனர்.
எம்.எல்.ஏ.,வை தடுத்து நிறுத்திய போலீஸ்...
ஊட்டியில் உள்ள, அரசு தமிழக விருந்தினர் மாளிகைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க காரில் வந்த, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசனை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால், சில நிமிடங்கள் 'சலசலப்பு' ஏற்பட்டது. அதன் பின்பு, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், உடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, எம்.எல்.ஏ.,வுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.