நீராதார பகுதியில் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற காங்., மனு
குன்னுார்:'குன்னுார், ஓட்டுபட்டறை பகுதியில், அரசு நிலத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, குடிநீர் ஆதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட டென்ட்ஹில், உட்கோட், பாலகிளவா, கேஷ்பஜார், ரயில்வே குடியிருப்பு பகுதிகளுக்கு, பிரிட்டீஷ் காலத்தில், ஓட்டுப்பட்டறை வழியாக, வாய்க்கால் அமைக்கப்பட்டு, கரடிபள்ளம் கிணறுகளில் இருந்து, நீர் எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து இங்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்த கிணறை சுற்றியுள்ள அரசு நிலத்தில். ஊற்றுநீர், வடிகால் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, வெல் ஹவுஸ் கிணறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, கரடிப்பள்ளம் வெல்ஹவுஸ் பகுதியில் உள்ள, குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான வற்றாத நீர் ஆதாரம் கொண்ட கிணற்றை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. கடந்த, 2002, 2013ல், கள ஆய்வு மேற்கொண்டு, நகராட்சியால் ஆக்கிரமிப்புகள் இருமுறை அகற்றப்பட்டன.இந்நிலையில், தற்போது மீண்டும் நகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் நீரூற்றுகளையும், வடிகால் தொட்டியையும் மூடி, அரசு அனுமதியின்றி கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.குன்னுார் நகர காங்., துணைத்தலைவர் லட்சுமி கூறுகையில், ''அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி குடிநீர் ஆதாரத்தை மீண்டும், நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும். இது தொடர்பாக நகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. மாநில முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளோம்,'' என்றார்.