தொடரும் உயிர் பலிகள்! பிரச்னைகளின் போது மட்டும் வாக்குறுதிகள் ஏராளம்; மனித - விலங்கு மோதலை தடுக்க தீர்வு கிடைக்குமா?
பந்தலுார்; கூடலுார் வனக்கோட்டத்தில் தொடரும் மனித-- -விலங்கு மோதலை தடுக்க ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தின், கூடலுார் வனக்கோட்டத்தில், 'ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு,' ஆகிய, 6- வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களை உள்ளடக்கிய பகுதிகள், முதுமலை மற்றும் பிற வனப்பகுதிகள் மட்டுமின்றி; கேரளா மாநிலம் நிலம்பூர், வயநாடு வனப்பகுதிகள்; முத்தங்கா மற்றும் பந்திப்பூர் ஆகிய பகுதிகளின் எல்லை பகுதிகளாகவும் உள்ளன.இங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டி கிராம குடியிருப்புகள், தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் சார்ந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. கோடை மற்றும் மழை காலங்களில், முதுமலை மற்றும் முத்தங்கா, பந்திப்பூர் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புகள் மற்றும் பிற பகுதிகளில் முகாமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. கடந்த காலங்களில் தடையில்லை
கடந்த காலங்களில் இந்த வழித்தடங்களில் எந்த தடைகளும் இல்லாத நிலையில், மனித- விலங்கு மோதல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. சமீப காலத்தில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதிகளில் களைச் செடிகளின் ஆதிக்கத்தால், வன விலங்குகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் வழித்தடங்களிலும் கட்டடங்கள் மற்றும் அதனை சார்ந்து மின் வேலிகள் அமைத்துள்ளதால் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள், விலங்குகள் வழிமாறி தடைகள் இல்லாத கிராமங்கள் மற்றும் அதனை சார்ந்த தோட்டங்களை தங்களின் வாழ்விடங்களாக மாற்றி வருகின்றன. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி
இதனால், கிராமப்பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் யானை--மனித மோதலை தடுப்பதற்காக எந்த உபகரணங்களும் இல்லாமல் வன ஊழியர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த,10 ஆண்டுகளில் 136 மனித உயிர்கள், வன விலங்குகள் தாக்குதலுக்கு உட்பட்டு பலியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக ஊருக்குள் வரும் யானைகள், திரும்ப வனப்பகுதிக்குள் செல்லாமல் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. மாறிபோனஉணவு பழக்கம்
கிராமங்களுக்கு வரும் யானைகள் அவற்றின் உணவு பழக்கத்தை மாற்றி விவசாய விளை பொருட்களை உட்கொள்வது தொடர்கிறது. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் மக்கள் நடந்து செல்லும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில், யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் உலா வருவதால், வாகன வசதி இல்லாத பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் போது வன விலங்குகளால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பேச்சுவார்த்தையால் எந்த பயனும் இல்லை
மனிதர்களை வன விலங்குகள் தாக்கும் போது, தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களிடம், அப்போதைய சூழலை அமைதிப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்திதீர்வு காண்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்து செல்கின்றனர். சில நாட்களில் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்றன. மக்களுக்கு இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை. வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'அதிகரித்து வரும் மனித- விலங்கு மோதலை கட்டுப்படுத்தும் வகையில், மனிதர்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க, உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து, தொலை நோக்கு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். முதலில் யானை வழித்தடங்களில் உள்ள மின் வேலிகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுத்தால், பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.