கட்டடம் கட்டும் போது தடுக்காத அதிகாரிகள்; பணிகள் முடிந்த பிறகு சீல் வைப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
குன்னுார்; குன்னுார் நகராட்சி மாதாந்திர கூட்டம், தலைவர் சுசீலா தலைமையில் நடந்தது. கவுன்சிலர் ராஜேந்திரன்: குன்னுார் நகராட்சி யார் தலைமையில் செயல்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓராண்டாக வைக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லை. அலுவலகத்திற்கு பூட்டு போடுங்கள். கவுன்சிலர் ராமசாமி: இங்கு அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது. இங்கு கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை. கட்டடம் கட்டும் போது தடுக்காமல், கட்டி முடித்த பிறகு, 'சீல்' வைக்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட கட்டடங்கள் மட்டும் சீல் வைக்கப்படுகிறது. அதிகாரிகளை கண்டித்து கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். உள் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக, கவுன்சிலர்கள் ஜாகிர், வசந்தி, மன்சூர் ஆகியோர் குற்றம் சாட்டினர். அப்போது, 'அதிகாரிகள் பொய் பேசுகின்றனர்,' என, துணைத் தலைவர் வாசிம் ராஜா குற்றம் சாட்டினார். 'கட்டடங்களுக்கு சீல் வைக்கும் விஷயங்களை தலைவர் அறையில் பேசுங்கள்,' என, அ.தி.மு.க கவுன்சிலர் சரவணகுமார் கூறிய போது, குறுக்கிட்ட தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி, 'எல்லா விஷயமும் பொதுவாக தான் பேச வேண்டும்,' என்றார். கமிஷனர் இளம்பரிதி: பல முறை எச்சரிக்கை விடுத்தும் 'லோக்கல்' உதவியுடன் அவர்கள் கட்டுகின்றனர் என, கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெகநாதன் : வண்ணாரபேட்டை மயானத்தில் இந்து மயான கமிட்டி என கூறி, புதைப்பவர்களிடம் வசூல் செய்யப்படுகிறது. இதனை நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். உமாராணி : கார்ன்வால் ரோடு நகராட்சி பள்ளி மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தி சமூக விரோத செயல் நடக்கிறது. இரும்பு வேலி அமைத்து கேட் சரி செய்ய வேண்டும். சரவணகுமார்: எஸ்.ஏ.டி.பி., திட்ட வேலைகளை அனைத்து வார்டுகளிலும் பிரித்து வழங்கி அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நகராட்சி காலி பணியிடங்கள் நிரப்ப பரிந்துரை செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைத்துள்ள பேனர்கள் அகற்ற வேண்டும். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். மன்சூர்: டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நகராட்சியில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதனை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர். இதேபோல, குன்னுார் நகராட்சியில், சில இடங்களில், 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 'எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் சுகாதாரம் இல்லாமல் வரும் குடிநீரை சுத்திகரிக்க வேண்டும்,' என்பன, போன்ற கோரிக்கைகளை கவுன்சிலர்கள் வசந்தி, மன்சூர், குருமூர்த்தி உட்பட பலர் வலியுறுத்தினர். கமிஷனர் இளம்பரிதி: இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.