மனித - -விலங்கு மோதலை தவிர்க்க வனத்தில் பூர்வீக தாவரங்கள் வளர்ப்பு
கூடலுார்; 'கூடலுாரில் மனித- விலங்கு மோதலை தவிர்க்க, வனத்தில் அன்னிய களை செடிகளை அகற்றி, பூர்வீக தாவரங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.கூடலுார் வன கோட்டத்தில், வனத்துறை சார்பில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள அன்னிய களை செடிகளை, பொதுமக்களுடன் இணைந்து அகற்றும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில், அல்லுார் வயல் பகுதியில், இப்பணி நடந்தது. வனவர் வீரமணி தலைமையில் வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, களை செடியால் ஏற்படும் பாதிப்புகள், அதனை அகற்ற வேண்டிய கட்டாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுபோன்று அனைத்து வனச்சரகங்களிலும், களை செடிகள் அகற்றப்பட்டன.வனத்துறையினர் கூறுகையில், 'உலக சுற்றுச்சூழல் தினத்தில், வனங்கள் பாதுகாப்பு குறித்தும் அன்னிய களை செடிகளால் வனத்துக்கும் அதனை சார்ந்துள்ள தாவரங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.மனித - விலங்கு மோதலை தவிர்க்க, பூர்வீக தாவரங்களை மீண்டும் வனப்பகுதிகளில் நடவு செய்து மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.