தேவர் சோலை டவரில் திடீர் புகை ஊழியர்கள் வந்ததால் சேதம் தவிர்ப்பு
கூடலுார், ;கூடலுார் தேவர்சோலை அருகே, யானைகளை கண்காணிக்க வசதியாக செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்துவதற்காக, அமைக்கப்பட்டுள்ள டவரில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலுார் பகுதியில், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணித்து, ஊருக்குள் நுழையாமல் விரட்டும் வகையில், வனத்துறை சார்பில், 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்துவதற்கான, சோலார் மின் வசதியுடன் கூடிய டவர்கள் அமைக்கப்பட்டது. இந்த டவர்களில் அடுத்த வாரம், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் துவங்க உள்ளனர். இந்நிலையில், தேவர்சோலை தேவன்-2 பகுதியில், அமைக்கப்பட்ட டவரில் நேற்று, காலை திடீரென புகை ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், தொழில்நுட்ப ஊழியர்களுடன் சென்று, அதனை உடனடியாக சீரமைத்தனர். பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'டவரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் இருந்து புகை ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்னை உடனடியாக சீரமைக்கப்பட்டது,' என்றனர்.