மினி பஸ்களால் பாதிப்பு: போலீசில் புகார்
குன்னுார்; குன்னுார் ஜெகதளாவிற்கு இயக்கப்படும் மினி பஸ்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண கோரி, பொதுமக்கள் போ லீசில் புகார் அளித்தனர். குன்னுாரில் இருந்து ஜெகதளா கிராமத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் டிரைவர், கண்டக்டர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதனை த ட்டி கேட்ட கிராம இளைஞர்களிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று ஊர் கமிட்டி உறுப்பினர் சுப்ரமணி தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து அருவங்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்தனர். கிராம மக்கள் கூறுகையில்,''குன்னுாரில் இருந்து அருவங்காடு வரை, 20 நிமிடகள் என மெதுவாக இயக்கப்படும் மினி பஸ்கள், அருவங்காட்டில் இருந்து ஜெகதளா வரை அதிவேகத்தில் இயக்கப்படுகிறது. அதிக சப்தத்தில் பாடல்கள் இசைப்பதால் பய ணிகள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மினி பஸ்களில் அமர்ந்து, குடிபோதையில் மக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும்,'' என்றனர்.