சாலையின் நடுவில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்குவதால் பாதிப்பு
பந்தலுார்; பந்தலுார் பஜார் சாலையின் நடுவில் பஸ்சை நிறுத்துவதால், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. கேரளா மாநிலத்திலிருந்து, பந்தலுார் வழியாக கோவை, பாலக்காடு, திருச்சூர், கல்பெட்டா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கோழிக்கோடு பகுதிகளுக்கு கேரளா மாநில அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதில், பந்தலுார் பகுதியில் வனவிலங்கு தொல்லை அதிகம் உள்ளதால், 'காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் பயணிகள் இறங்க வேண்டிய இடத்தில் பஸ்களை நிறுத்தி இறக்கி விட வேண்டும்,' என்ற உத்தரவு உள்ள நிலையில், கேரளா மாநில அரசு பஸ்களில் இதனை பின்பற்றுவதில்லை. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். மூன்று மாநில வாகனங்கள் செல்லும் சாலையில், நடுவில் பஸ்களை நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பயணிகள் கூறுகையில், 'விதிமீறும் கேரளா மாநில அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட ஸ்டாப்களில் பஸ்களை நிறுத்தும் நிலை ஏற்படும்,' என்றனர்.