சேதமடைந்த நடைபாதை: சீரமைத்தால் பயன்
கூடலுார்,; 'கூடலுார் அருகே, சேதமடைந்த அட்டிகொல்லி கிராம சிமென்ட் பாதையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே உள்ள அட்டி கொல்லி கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு மரப்பாலம்-புளியம்பாறை சாலையில் இருந்து சிமென்ட் பாதை பிரிந்து செல்கிறது. இப்பாதையை, மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்கள் இயக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.வயல்வெளி மற்றும் விவசாய தோட்டம் வழியாக செல்லும் சிமென்ட் பாதை, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்லவும் இருசக்கர வாகனம் இயக்கவும் சிரமம் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கிராமத்துக்கு சென்றுவர இந்த சிமென்ட் பாதையை தவிர வேறு வழி இல்லை. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ள இந்த பாதையில் இரவு நேரங்களில் நடந்து செல்ல கூட சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் சேதம் அடைந்த பகுதியை மக்கள் தற்காலிகமாக சீரமைத்து நடந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கிராம மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிமென்ட் பாதையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.