உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானையை கராலில் அடைக்க முடிவு

காட்டு யானையை கராலில் அடைக்க முடிவு

கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியில், காட்டு யானையை பிடித்து வனத்தில் விடுவதற்கு முன், அதனை சாந்தப்படுத்த, முதுமலை யானைகள் முகாமில் கராலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடலுார் ஓவேலி பகுதியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதா கிருஷ்ணன்' என்ற காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், 4 கும்கி யானைகள் உதவியுடன், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், 105 வன ஊழியர்கள், போலீஸ் உட்பட, 140 பேர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்கான பணி துவங்கியது. அப்போது, 'மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் யானையை எங்கு விடுவது,' என்பது குறித்த விபரங்களை வனத்துறை வெளியிடவில்லை. இந்நிலையில், காட்டு யானை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு முன், அதனை அடைத்து சமாதானப்படுத்தும் வகையில், முதுமலை அபயாரண்யம் யானைகள் முகாமில், கரால் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஓவேலி பகுதியில் காட்டு யானை குறிப்பிட்ட பகுதியை விட்டு நகர்ந்து செல்லாத வகையில், அதன் நடமாட்டத்தை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'ஓவேலியில், மயக்க ஊசி செலுத்தி, காட்டு யானை பிடிக்கும் பணி தொடர்கிறது. யானை, பிடித்து வனப்ப குதியில் விடுவதற்கு முன், அதனை இரண்டு வாரம் கராலில் அடைத்து சாந்தப்படுத்தி, வனத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதுமலை யானை முகாமில் கரால் அமைக்கும் பணி நடந்து வருகிறது,' என்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !