குன்னுார் - அதிகரட்டி -வழித்தடம் அரசு பஸ் இயக்காததால் அதிருப்தி
குன்னூர்; குன்னுார் - அதிகரட்டி -ஊட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார்- அதிகரட்டி- ஊட்டி வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால், சின்ன கரும்பாலம், கரும்பாலம், சேலாஸ், கெந்தளா, சன்னிசைடு, கோடேரி, குன்னக்கம்பை, மணியாபுரம், நெடிகாடு, முட்டிநாடு, பாலகொலா, தாம்பட்டி கிராமங்களில் இருந்து மக்கள் ஊட்டி மற்றும் குன்னூருக்கு நேரடியாக சென்று வந்தனர்.மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் மகளிர் பெரும் பயனடைந்தனர். இந்நிலையில், அதிகரட்டி கிராமத்திற்கு, மகளிருக்கு விடியல் பயணம் கேட்டதால், இந்த பஸ் மாற்றப்பட்டு, அதிகரட்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதிகரட்டி வார்டு உறுப்பினர் மனோகரன் கூறுகையில், ''விடியல் பஸ் இயக்கப்பட்டதால், மக்கள் அடையும் மகிழ்ச்சியைவிட, அவர்கள் படும் சிரமம் அதிகரித்து, அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து கிராம மக்கள் பயனடையும் வகையில் பழையபடி பஸ்கள் இயக்க வேண்டும். அதுவரை, தற்காலிகமாக குன்னுாரில் இருந்து அதிகரட்டி வரை செல்லும் பஸ் பாலகொலா சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.