மொபைல் போன் பார்த்து கொண்டே சமைக்காதீர்கள்; சமையல் காஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
குன்னுார்; 'மொபைல் போன் பார்த்து கொண்டே சமைப்பதை தவிர்க்க வேண்டும்,' என, மகளிருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.குன்னுார் அருகே, கேத்தி ஆலட்டணை கிராமத்தில் காஸ் சிலிண்டர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது.கருத்தாளராக பங்கேற்ற நீலகிரி காஸ் நிறுவன மேலாளர் சீதாராமன் பேசுகையில், ''காஸ்சிலிண்டர், அடுப்பு, ரெகுலேட்டர் உள்ளிட்டவை பாதிப்பு இல்லாத வகையில் வைத்து கொள்ள வேண்டும். மொபைல்போன் பார்த்து கொண்டே சமைப்பது, இரவில் ரெகுலேட்டரை அணைக்காமல் இருப்பது சிலிண்டரின் மீது சுடுநீர் வைப்பது போன்றவற்றால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.விசேஷ காலங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களில் வணிக உபயோக ரெகுலேட்டரை பொருத்தி சமைப்பது தவிர்க்க வேண்டும். இது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.குன்னுார் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன் பேசுகையில்,''காஸ் சிலிண்டர் பதிவு செய்து, 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், கிராமப்புற மக்கள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் விநியோகிப்பாளர்களின் முறைகேடுகளுக்கு தம்மை அறியாமலேயே துணை போய் விடுகின்றனர்.பில் இல்லாமல் காஸ் சிலிண்டர்கள் வாங்கக்கூடாது. வீடுகளுக்கு வந்து காஸ் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் செலுத்த கூடாது மானியத்தில் வழங்கப்படும் சேவைகள் பெறும்போது முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். கிராம மக்கள் பங்கேற்றனர்.