உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை வேண்டாம்: நாடு முன்னேற பாடுபடுங்கள்; மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

போதை வேண்டாம்: நாடு முன்னேற பாடுபடுங்கள்; மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

குன்னுார்; ''போதைக்கு அடிமையாகாமல், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நாடு முன்னேறவும் மாணவர்கள் பாடுபட வேண்டும்,'' என நீதிபதி செந்தில்குமார் பேசினார்.குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரி இயந்திரவியல் துறை அரங்கில், என்.எஸ்.எஸ்., இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் போதை பொருள் எதிர்ப்பு சங்கம் ஆகியவை சார்பில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஊட்டி மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார் பேசியதாவது:நாடு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை அழித்து கொண்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாட்டில், 18 வயதிற்கு உட்பட்ட, 3 லட்சம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாநில அரசு அனைத்து உதவியுடன் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபடுகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையாகாமல், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நாடு முன்னேறவும் மாணவர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.'போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள், கலாசார சீரழிவு, போதைக்கு அடிமையாகாமல் தடுப்பது,' குறித்து, ஊட்டி டவுன் இன்ஸ்பெக்டர் நித்யா பேசினார். மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய மூத்த சிவில் நீதிபதி பாலமுருகன், டி.எஸ்.பி., யசோதா, கல்லுாரி தாளாளர் காட்வின் டேனியல், முதல்வர் ஜோஸ்வா ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி கல்வி தலைவர் டாக்டர் ராஜேஷ், கேத்தி சப்--இன்ஸ்பெக்டர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள், 220 பேர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பிரதாப் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ