குப்பைகளை திறந்த வெளியில் கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
கூடலூர்: கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், வாகனங்களில் இருப்பிடம் சென்று நகராட்சி சார்பில் குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர். நகரில் சில பகுதிகளில், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க, தனியார் பங்களிப்புடன் சிறு பூங்கா அமைத்து, அப்பகுதி புதுப்பொலிவாக மாற்றியுள்ளனர். இம்முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். சில பகுதிகளில் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டி வருகின்றனர். கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திறந்தவெளியில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு தேடி வரும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சுகாதாரத்தை பாதுகாக்க, அப்பகுதியில், திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.