போலீஸ் - நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர்
கோத்தகிரி; கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் போலீசார் -நண்பர்கள் சார்பில், பொதுமக்கள் நலன் கருதி, தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.கோடைகாலத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, கடுமையான வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கும் விதமாக, போலீசார் மற்றும் நண்பர்கள் சார்பில், கோத்தகிரி மார்க்கெட் சந்திப்பில், இலவச தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நகருக்கு வரும் மக்கள் இந்த தண்ணீரை பருகி தாகம் தணிந்து செல்கின்றனர்.இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில், பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கோத்தகிரி போக்குவரத்து எஸ்.ஐ., சிவக்குமார் கூறுகையில், ''கடுமையான உஷ்ணம் காரணமாக, மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நகருக்கு வரும் ஏழை எளிய மக்கள் உட்பட, பள்ளி மாணவர்கள் தண்ணீர் பருக ஏதுவாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, எதிர்வரும் நாட்களில், நகரின் பிற பகுதிகளிலும், நண்பர்களின் உதவியுடன் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும். இதனை முறையாக பராமரிக்க உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த பணியால், கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன் பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.