குடிபோதையில் மினி பஸ் இயக்கிய டிரைவருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
குன்னுார்; குன்னுார் உபதலை மினி பஸ், டிரைவர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் அபராதம் விதித்தனர். குன்னுாரில் இருந்து உபதலை உட்பட பல்வேறு இடங்களுக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை உபதலையில் இருந்து, குன்னுார் வந்த மினி பஸ், பாய்ஸ் கம்பெனியில் முறையின்றி நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருவங்காடு போலீசார் பரிசோதனை செய்ததில், டிரைவர் ஸ்டீபன் பிரிட்டோ குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால், 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே, குன்னுார் பகுதிகளில் இயக்கப்படும் மினி பஸ்களை குடிபோதையில், இயக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. மக்கள் கூறுகையில், 'அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்புவது; கண்டக்டர் லைசன்ஸ் இல்லாத இளைஞர்கள் பணியாற்றுவது; உரிய நேரத்தில் இயக்காமல் இருப்பது என, பல்வேறு புகார்கள் உள்ளதால், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.