உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பர்லியார் மலைபாதையில் துரியன் பழங்கள் சீசன் கிலோ ரூ. 600 வரை விற்பனை

பர்லியார் மலைபாதையில் துரியன் பழங்கள் சீசன் கிலோ ரூ. 600 வரை விற்பனை

குன்னுார்: குன்னுார்- பர்லியார் மலைபாதைகளில், துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளின் காலநிலை, அரிய வகை பழங்கள் விளைய ஏற்றதாக உள்ளது. பிளம்ஸ், பேரி, பெர்சிமென், ரம்புட்டான், துரியன், ஊட்டி ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் விளைகின்றன. அதில், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோர வனப்பகுதிகள் மற்றும் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணை, தனியார் தோட்டங்களில் துரியன் சீசன் துவங்கியுள்ளது. இங்கு விளையும் பழங்கள் மட்டுமின்றி, கல்லார், கொடைக்கானல் பகுதிகளில் விளையும் பழங்கள், பர்லியார் வடுக தோட்டம் பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று கிலோ, 450 முதல் 600 ரூபாய் வரை தரத்துக்கு தகுந்தாற் போல் விற்கப்படுகிறது. இதனை வாங்க கிராக்கி அதிகரித்துள்ளது. தற்போது, தோட்டக்கலை பண்ணையில் உள்ள பெரும்பாலான மரங்களில் பழங்கள் சீசன் துவங்கியுள்ளது. இப்பகுதி வியாபாரிகள் கூறுகையில்,'கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு துரியன், மங்குஸ்தான் போன்ற பழங்கள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டு, அதன் விதைகள் சேகரித்து மீண்டும் நடவுக்கு பயன்படுத்தப்பட்டது. அதில், துரியன் பழங்கள், 2 முதல் 5 கிலோ வரை இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர் இந்த பழத்தை உட்கொண்டால் நல்ல பயன் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால், பழத்தை வாங்க ஆண்டுதோறும் கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும், கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை