உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் இ-வேஸ்ட் கலெக்ஷன்! எடைக்கு உரிய தொகை வழங்குவதால் மக்கள் மகிழ்ச்சி

குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் இ-வேஸ்ட் கலெக்ஷன்! எடைக்கு உரிய தொகை வழங்குவதால் மக்கள் மகிழ்ச்சி

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், முதல் முறையாக வீடுகள் தோறும் சென்று, இ--வேஸ்ட் மற்றும் பழைய துணிகள் பெறும் திட்டம் துவங்கப்பட்டது.குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மட்கும், மட்காத குப்பைகள் சேகரித்து, மறுசுழற்சி மேலாண்மை மையத்தில் கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகிறது. இதே போல, சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைக்கவும், முறையாக குப்பைகளை அகற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இப்பகுதியை 'பிளாஸ்டிக்' இல்லாத பகுதியாக மாற்ற, குப்பைகள் ஆங்காங்கே வீசாமல் தடுக்கவும், மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீர் ஆதாரங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க துார்வாரப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வாரியத்தில் உள்ள, 7 வார்டுகளிலும் மஞ்சள் பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே உத்தரவின் பேரில், முதல் முறையாக இ--வேஸ்ட் பொருட்கள் மக்களிடம் நேரடியாக சென்று பெற்று, எடைக்கு உரிய தொகையை வழங்குதல், மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழைய துணிகள் வழங்குதல் திட்டம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க நிகழ்ச்சி, சின்ன வண்டிச்சோலை மலையப்பன் காட்டேஜ் பகுதிகளில் நடந்தது. வாரிய சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, வாரிய நியமன உறுப்பினர் ஷீபா, முன்னாள் துணைத் தலைவர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில், வாரிய ஊழியர்கள் மற்றும் பழைய பொருட்களை எடைக்கு எடுக்கும் வியாபாரிகள், 'ஊட்டி யுனிவர்சல் அமைதி அறக்கட்டளை' ஆதரவற்றோர் முதியோர் இலவச காப்பக நிர்வாகிகள் இவற்றை பெற்றனர்.இதில், 75.6 கிலோ துணிகள், 42.25 கிலோ இரும்பு, பழைய பேப்பர் புத்தகங்கள் 21.30 கிலோ, இ---வேஸ்ட் 17.56 கிலோ, பிளாஸ்டிக் 2.5 கிலோ பெறப்பட்டன. இதற்கான தொகையும் வழங்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'வாரியத்தில் ஆங்காங்கே வீசும் பழைய துணிகள் மற்றும் மின் சாதன பொருட்களால் சுற்றுச்சூழலுக்கும் வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க நேரடியாக மக்களிடம் சென்று, பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் எடைக்கு ஏற்ப பணம் வழங்கி, பழைய பிரிட்ஜ், டிவி லேப்டாப், மிக்சி, ஒயர்கள் பெற்று கொள்வர். பழைய துணிகளை இலவச ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் இவற்றை ஒவ்வொரு வார்டுகளிலும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ