பட்டு உற்பத்தியில் முதலிடம் பிடிப்பதற்கான முயற்சி; சர்வதேச பட்டு ஆணைய பொதுச்செயலாளர் தகவல்
பந்தலுார்; 'பட்டு உற்பத்தியில் சர்வதேச அளவில் நம் நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலுாரில், சர்வதேச பட்டு ஆணைய பொதுச் செயலாளர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய பட்டு வாரியம், 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த வாரியம், கடந்த, 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில், சர்வதேச அளவில், 23 நாடுகள் இணைந்துள்ள நிலையில், பட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, உலக அளவில் பட்டு உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பட்டு பயன்படுத்துவதில், உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 2030ம் ஆண்டிற்குள் பட்டு உற்பத்தியிலும், இந்தியா முதல் இடத்திற்கு கொண்டுவரப்படும். தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில், பட்டு உற்பத்தி செய்வதற்கான நல்ல சூழல் உள்ளது, எனவே, மாவட்ட முழுவதும் அதிகளவில் பட்டு உற்பத்தியாளர்களை உருவாக்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமே ஐந்து வகையான பட்டு நுால்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் நல்ல வருவாய் தரும் பட்டு நுால் உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு, சுயதொழிலில் ஈடுபட முன் வந்தால், பட்டு ஆணையத்தின் சார்பில் அனைத்து வழிமுறைகளும், ஆலோசனைகளும் வழங்கி அதற்கான நிதி உதவியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.