நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிக்கும் எலக்ட்ரிக் பஸ் அவசியம்! கிராமங்களுக்கு இயக்கினால் பெரும் பயன் ஏற்படும்
ஊட்டி: 'நீலகிரியின் இயற்கை சூழலை பாதுகாக்க எலக்ட்ரிக் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் காற்று மாசு என்பது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. காற்று மாசுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வாகனங்களில் இருந்து வரும் புகையாகும். இதன் பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கை நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.அதில், சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரியிலும், மாநில அரசு காற்றுமாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 'மாவட்டத்தில் இருசக்கரம், கார், கனரக வாகனங்கள், பஸ்கள்,' என , 34,000 வாகனங்கள் இயங்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவிக்கிறது.இவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குளிர் பிரதேசமான, நீலகிரி சமீப காலமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கோடை காலங்களில், 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூட வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதை தொடர்ந்து, மாவட்டத்தில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, ஐகோர்ட் இ-பாஸ், முறையை நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், 'மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான உள்ளூர் பழைய பஸ்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, சென்னையை போன்று, சிறிய ரக எலக்ட்ரிக் பஸ்களை, இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு இயக்கினால் பயன்
மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட போக்குவரத்து கழகத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு, 200 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தவிர , தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகிறது. அதிகபட்சம், 100 கி.மீ. , சுற்றளவில் பஸ்கள் சென்று வருகிறது. அதில், கிராமத்துக்கு இயக்கப்பட்ட பல்வேறு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.அதில், சில தனியார் மினி பஸ் உரிமையாளர்கள் எலக்ட்ரிக் பஸ் வசதியை கொண்டு வர தயாராக உள்ளனர். மாநில அரசும் எலக்ட்ரிக் பஸ் வசதியை படிப்படியாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதனை விரைவாக செயல்படுத்தினால் பெரும் பயன் ஏற்படும்.சுற்றுச்சூழல் ஆர்வலர் பெள்ளியப்பன் கூறுகையில், ''புவி வெப்பமடைதல் தற்போது ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நன்மை அளிக்கக்கூடியது. இந்த வாகனங்களின் பயன்பாட்டால் புகையில்லா சூழல் ஏற்படும். நீலகிரியில் மினி பஸ்கள் நிறுத்தப்பட்ட இடத்தில், மினி பஸ்களை இயக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோடை சீசன் காலங்களில் இத்தகைய பஸ்களை சுற்றுலா பயணிகளுக்கும் இயக்கினால், சுற்றுலா வாகனங்களை புறநகர் பகுதிகளில் 'பார்க்கிங்' செய்ய முடியும். நகரில் ஏற்படும் வாகன நெரிசலையும் குறைக்கலாம்,'' என்றார்.