உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடைகால தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரியம் உத்தரவு! நீலகிரி மின் நிலையங்களில் உற்பத்தி பணிகள் விறு விறு

கோடைகால தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரியம் உத்தரவு! நீலகிரி மின் நிலையங்களில் உற்பத்தி பணிகள் விறு விறு

ஊட்டி; 'கோடை காலத்தை சமாளிக்க, மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின் நிலையங்களை தயார்படுத்த வேண்டும்,' என, வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, அப்பர் பவானி, அவலாஞ்சி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா, கிளன்மார்கன், மாயார் முக்கூர்த்தி,' உட்பட, 13 அணைகள் உள்ளன. அதே போல், குந்தா மின் வட்டத்தின் கீழ், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுக்குப்பை,' என , 6 மின் நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 'முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயார், மரவகண்டி,' என, 12 மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. நீலகிரி மாவட்ட முழுவதும், 2.50 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 80 சதவீதம் ஈரோடு, மதுரை,சென்னை ஆகிய மையப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, நீலகிரி உட்பட பிற மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

கோடையில் மின் தேவை அதிகரிப்பு

மாநில அளவில் நீர் மின் உற்பத்தி நீலகிரியில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. அதில், தொழில் நகரங்களான, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. கோடை வெயில் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்துள்ளது.அதே சமயத்தில் இங்குள்ள அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்ட பயன்பாடுகளையும் பூர்த்தி செய்வதால், தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, முக்கிய அணைகளான அப்பர்பவானியில், 210 க்கு 150 அடி; பைக்காராவில், 100க்கு 64 அடி; அவலாஞ்சியில், 184 க்கு 100 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. பிற அணைகளிலும் தண்ணீர் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.

மின் தேவையை சமாளிக்க ஏற்பாடு

இதையடுத்து, 'கோடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் நிலையங்களை தயார்படுத்த வேண்டும்,'என, சென்னை தலைமை மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குந்தா, பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்; அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப சேமித்து வைத்து பிற மின் நிலையங்களுக்கு மின்சார உற்பத்திக்கு எடுத்து செல்வது; காலை, மாலை நேரங்களில் உச்ச மின் தேவைக்கான உற்பத்தி,' உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் நாள்தோறும், 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் உள்ள மின் நிலையங்களில் நீர்மின் உற்பத்தி அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. சமவெளி பகுதிகளில் கோடை காலத்தின் மின் தேவையை சமாளிக்க மின் வாரியம் தலைமை உத்தரவுப்படி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தேவையான பணிகள் நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை