நீதிபதி முயற்சியால் மின் இணைப்பு; 15 ஆண்டுகளுக்கு பின் வீட்டில் ஒளி
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்வயல் பகுதியில் கடந்த, 15 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி போராடிய நிலையில், நீதிபதி முயற்சியால் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பந்தலுார் அருகே பொன்வயல் பகுதியை சேர்ந்தவர் கனகஜோதி. இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீட்டிற்கு மின் இணைப்பு கோரி பலமுறை விண்ணப்பித்த போதும், விண்ணப்பம் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்களின் நிலை குறித்து பந்தலுார் நீதிமன்ற நீதிபதி பிரபாகரனிடம் தெரிவிக்கப்பட்டது. 'இவர்களின் நிலை குறித்து உடனடியாக ஆய்வு செய்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மின்வாரிய அதிகாரிகளிடம் நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு ஆய்வுக்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதி, வக்கீல்கள், இலவச சட்ட பெண்கள் குழு பணியாளர்களை சந்தித்து கனகஜோதி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.