யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி டான் டீ பகுதியில், யானைகள் முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, சேரங்கோடு, சேரம்பாடி டான் டீ, பத்து லைன், கோரஞ்சால் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் முகாமிடும் யானைகள், இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுகிறது. இதனால், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில், சிரமப்பட்டு வருகின்றனர். காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் அச்சத்துடன், நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், யானைகளால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, வனச்சரகர் அய்யனார், வனவர் முத்தமிழ் தலைமையிலான வனக்குழுவினர், 24 மணி நேரமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'டிரோன்' கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன், இரவில் ஒலிபெருக்கியில் பொது மக்களுக்கு அறிவிப்பும் செய்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'பொதுமக்கள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும், இரவு நேரங்ககள் மற்றும் அதிகாலை நேரத்தில் செல்வதற்கு முன்பாக, வனத்துறையினரிடம், யானைகள் நடமாட்டம் உள்ளது குறித்து கேட்டு தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்,' என்றனர்.