கோவை- கெத்தை இடையே யானை நடமாட்டம்; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அட்வைஸ்
ஊட்டி: கோவை- கெத்தை சாலையில், கூட்டமாக குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால், டிரைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மஞ்சூரில் இருந்து, காரமடை வழியாக, கோவைக்கு செல்லும் மாற்று சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வனத்துடன், தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இச்சாலையில், இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக, குட்டியுடன் சில யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளன. இவை, அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறித்து, இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வறட்சி காரணமாக குட்டியுடன் ஏழு யானைகள் கேரளா வனப்பகுதியில் இருந்து, முள்ளி வழியாக கெத்தை பகுதிக்கு வந்து, சாலையில் நடமாடி வருகின்றன. இப்பகுதியில் மொத்தம், 20 யானைகள் உலா வருவதாக தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த, ரேஞ்சர் செல்வகுமார் தலைமையிலான, வனத்துறையினர், ஒலிபெருக்கி மூலம், டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'வறட்சி காரணமாக, ஏழு யானைகள், மஞ்சூர் ஒனிகண்டி - அன்னமலை முருகன் கோவில் பகுதியில் உணவு தேடி சுற்றித் திரிகின்றன. பகல் நேரத்தில் எச்சரிக்கையாக டிரைவர்கள் இயக்க வேண்டும். இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வாகனத்திற்கும் போதுமான இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும். யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை, ஹார்ன் அடிப்பது, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.