உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சமவெளி பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரிப்பதால் மலையேறும் யானைகள்! மனித- விலங்கு மோதல் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு

சமவெளி பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரிப்பதால் மலையேறும் யானைகள்! மனித- விலங்கு மோதல் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு

குன்னுார் : சமவெளி பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரிப்பதால், மலை மாவட்டத்தின் வனப்பகுதிகளில், உணவு, குடிநீருக்காக தஞ்சம் அடைய வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேட்டுப்பாளையம், கோவை உட்பட சமவெளிபகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வனங்களில் வாழும் யானை உட்பட பிற விலங்கினங்களுக்கு தேவையான தண்ணீர், உணவு தாவரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளில் கொசுக்கடி அதிகரித்து வருவதால்,யானைகள் இடம்பெயர்ந்து மலை மாவட்டத்துக்கு வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், கடந்த மாதத்தில் முகாமிட்டிருந்த, 10 யானைகள் தற்போது மீண்டும் சமவெளியில் இருந்து வந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு குட்டியுடன், 5 காட்டு யானைகள் சின்ன குரும்பாடி அருகே சாலையோர பகுதியில் காணப்பட்டன. சாலையோரத்தில் இருந்த யானைகளை புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோத்தகிரி குஞ்சப்பனை அருகே இரு காட்டு யானைகள்,அல்வழியாக வந்த வாகனங்களை விரட்டின. தகவல் அறிந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வாழ்விடம்,வழித்தடம் அழிப்பு

சமவெளியில் இருந்து இங்கு வந்த யானைகளுக்கு, மலைப்பாதை ஓரங்களில் தேவையான உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. குரும்பாடி, புதுக்காடு பகுதிகளில், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதில், யானை வழித்தடங்களை அழித்து தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், யானைகள் வழி மாறி, குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பல கிராமங்களின் மக்கள் இரவில் வெளியே வரமுடியாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். வரும் நாட்களில் குடிநீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு யானைகள் செல்வது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, வனத்துறையினர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:சமவெளி மற்றும் மலை பகுதிகளில் உள்ள இலையுதிர், முட்புதர் காடுகளில்உள்ள ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள காலத்துக்கு ஏற்ப, யானைகள் அவ்வப்போது சமவெளியில் இருந்து மலை பகுதிக்கு இடம் பெயர்கின்றன. அவைகள் ஆண்டு தோறும் வரும் வனப்பகுதிகள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வருவதால், அவை அந்த இடத்தை விட்டுவேறு இடத் துக்கு செல்லும்,'' என்றார்.

ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''குன்னுார் மலை பாதையில், பல ஆண்டுகளாக உலா வந்த குள்ள யானை என்ற அழைக்கும் ஒற்றை கொம்பன், பர்லியார் முதல் காட்டேரி வரை மட்டுமே உலா வந்தது. கடந்த, 4 நாட்களுக்கு முன்பு, கரிமராஹட்டி, பழத்தோட்டம் பகுதியில் உலா வந்தது. இந்நிலையில், பழத்தோட்டம் முக்கட்டி வழியாக, இந்த யானை தொட்டபெட்டா சென்றுள்ளது. பழத் தோட்டம் அருகே யானை இருந்த போது, 'ட்ரோன்' இயக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை