மேலும் செய்திகள்
சாலையில் யானை: பைக்கில் வந்தவர் 'எஸ்கேப்'
23-Nov-2024
பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலியாஸ்கடை சாலை ஓரத்தில், மஸ்து ஏற்பட்டுள்ள நிலையில் கொம்பன் யானை முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர். பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட, நெலாக்கோட்டை பகுதியில், கொம்பன் யானை ஒன்று முகாமிட்டு வாகனங்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானை, 30 கி.மீ., தொலைவில் உள்ள சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, எலியாஸ் கடை பகுதிக்கு வந்து கடந்த சில நாட்களாக முகாமிட்டு உள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை கோழிக்கோடு மற்றும் வயநாடு செல்லும் சாலையை ஒட்டிய, தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது. இரவு சாலைக்கு வந்த யானை, கட்டை கொம்பன் மற்றும் புல்லட் ஆகிய இரண்டு யானைகளையும் தாக்கி வனப்பகுதிக்குள் துரத்தியது. இந்த வழியாக வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், கண்காணிப்பு பணியில் சேரம்பாடி வனத்துறையினர் ஈடுபட்டனர். கொம்பன் யானை வனத்துறை வாகனத்தை தாக்க முற்பட்டு துரத்தியது. வனத்துறையினர் வேகமாக வாகனத்தை எடுத்து சென்றதால் தப்பித்தனர். நேற்று காலை முதல் சாலையோர புல்வெளியில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்கள் அருகில், கொம்பன் யானையும் நின்றுள்ளது. இதனை பார்த்த மற்ற யானைகள், அங்கிருந்து இடம் பெயர்ந்தன. 'மஸ்து' ஏற்பட்டுள்ள இந்த கொம்பன் யானை கோபத்துடன் உலா வருகிறது. வனத்துறையினர் கூறுகையில்,'கொம்பன் யானை மஸ்துடன் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் யானையை பார்த்து ரசிப்பதற்காக வாகனங்களை நிறுத்த கூடாது; யானை சாலையில் இரவு நேரத்தில் நடந்து வந்தால் வாகனங்களை துாரமாக நிறுத்த வேண்டும். யானை ஊருக்குள் வந்தால், பிதர்காடு மற்றும் சேரம்பாடி உள்ள கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.
23-Nov-2024