சத்துணவு கூடத்தை சூறையாடிய யானைகள்; ஒன்பது மூட்டை அரிசியை ருசித்து சென்றன
பந்தலுார்; பந்தலுார் அருகே, கரியசோலை பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தை சூறையாடிய யானைகள் ஒன்பது மூட்டை அரிசியை ருசித்து சென்றன.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, கரியசோலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளி தடுப்பை இடித்து யானைகள் உள்ளே வந்தன. அங்குள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த, ஒன்பது மூட்டை, 450 கிலோ அரிசியை வெளியே எடுத்து உட்கொண்டன.மேலும், உள்ளே இருந்த பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் குடம், சிறிய தண்ணீர் தொட்டி ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளன. யானைகள் முழுமையாக உள்ளே செல்ல முடியாததால் பல பொருட்கள் தப்பின. நேற்று காலை இதனை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து, வனச்சரகர் ரவி, வனவர் சுதீர்குமார், சத்துணவு அமைப்பாளர் புனிதவதி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு சத்துணவு சமையல் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.யானைகள் பள்ளியை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால், வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால், இப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.