தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
குன்னுார்; குன்னுாரில் வரும், 28ல் நடக்கும் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குன்னுாரில் தொழிலாளர் வைப்பு நிதி மாவட்ட அலுவலகம் சிம்ஸ் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து பங்குதாரர்களின் குறைகள் தீர்க்க, 'நிதி ஆப்கே நிகட் 2.0' என்ற பெயரில், குறை தீர்கூட்டம் நடத்தி வருகின்றன.இம்மாதத்திற்கான கூட்டம் வரும், 28ல், 10:30 மணி முதல் 12:30 மணி வரை கோவை வருங்கால வைப்பு நிதி பிராந்திய ஆணையாளர் பிரசாந்த் தலைமையில், குன்னுார் இன்கோசர்வ் அரங்கில் நடக்கிறது. அதில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், இ.சி ஐ.சி., பயனாளர்கள், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகள் முறையிடலாம். கோவை மண்டல வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர் குமார் கூறுகையில், ''தனிப்பட்ட உறுப்பினர் அல்லது ஓய்வூதியதாரர்கள் குறைகளை தீர்க்கும் வகையில், அவர்களின் 'யு.ஏ., எண், வைப்பு நிதி கணக்கு எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், இசி. ஐ.சி., ஐ.பி எண்,' வைத்து, குறைகளை pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்,'' என்றார்.