முன்னாள் ஊராட்சி தலைவர் மீது ஆக்கிரமிப்பு புகார்; நில அளவை செய்த வருவாய் துறையினர்
பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில் நெலாக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடைபாதையை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நில அளவை செய்யப்பட்டது. பந்தலுார் அருகே பிதர்காடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர், தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மனைவி டெர்மிளா நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இவரின் வீட்டை ஒட்டி கிராம மக்கள் சென்றுவர நடைபாதை இருந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதனை ஆக்கிரமித்து, பன்னீர்செல்வம் தடுப்பு சுவர் கட்டியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, வருவாய் துறையினர் பலமுறை நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற அறிவுறுத்தி வந்தனர். தீர்வு காணாத நிலையில், மேட்டு பாங்கான பகுதியில் குடியிருக்கும் மக்கள், அவசர தேவைகளுக்கு வாகனங்கள் இயக்க முடியாத சூழல் உள்ளது. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி துாக்கி வர வேண்டிய சூழல் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற புகார் இந்நிலையில்,'இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்; அலட்சியப்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும்,' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தியதுடன், தாசில்தாருக்கும் புகார் மனு அளித்தனர். இதை தொடர்ந்து, நேற்று வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி, நில அளவையர் ராகுல், வி.ஏ.ஓ., செபீர், உதவியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் செந்தில் முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டது. அப்போது, 'நில அளவை செய்யும் பகுதியில் அதிகமாக புதர்கள் சூழ்ந்து உள்ளதால் அதனை அகற்றவும், துல்லியமாக நில அளவை செய்ய ஜி.பி.எஸ். கருவி கொண்டு வந்த பின்னர் அளவை செய்யப்படும்,' எனவும் குழுவினர் தெரிவித்தனர். அங்கு வந்த மக்கள் கூறுகையில், 'இரண்டு நாட்களுக்குள் நில அளவை செய்து, நடைபாதையை மீட்டு தர வேண்டும்; தவறினால் தொடர் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர். பன்னீர் செல்வம் கூறுகையில், ''நில அளவை செய்த பின்னர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதனை அகற்றி கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு இல்லாவிட்டால், வருவாய் துறையினர் தனது நிலத்திற்கு எல்லை கல் பதித்து தர வேண்டும்,'' என்றார்.