ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்; குன்னுார் நகராட்சி கமிஷனர் உறுதி
குன்னுார்; ''குன்னுாரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்,'' என, கமிஷனர் இளம் பரிதி தெரிவித்தார்.குன்னூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம், தலைவர் சுசீலா தலைமையில், கமிஷனர் இளம்பரிதி, துணை தலைவர் வாசீம்ராஜா முன்னிலையில் நடந்தது. முதலில் பெண் கவுன்சிலர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். கவுன்சிலர் உமா ராணி: ரேஷன் கடையின் இடிந்த பகுதி மற்றும் மழையால் இடிந்த தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.வசந்தி: மழையால் தடுப்பு சுவர் இடிந்த இடத்தில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு ஏற்படும். பராமரிப்பில்லாத சிறுவர் பூங்காவில் பார்க்கிங் வசதி வேண்டும்.சாந்தி: ஹவுசிங் யூனிட் பகுதியில் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளதால், கழிவுநீர் வீட்டிற்குள் செல்கிறது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர் ராமசாமி: நகராட்சி குடியிருப்பு பகுதியில், பள்ளி மாணவர்கள் உட்பட மக்கள் பயன்படுத்தும் புதர் சூழ்ந்து காணப்படும் பாதையை மாற்றி, நடைபாதையாக அமைக்க வேண்டும். சரவணகுமார்: சிங்கில் விண்டோ முறையில் ஆன்லைன் கட்டட பதிவு கடந்த, 10 வாரங்களாக செயல்படுவதில்லை. 'ஆப்பிள் பீ' பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை ஆய்வு செய்த பிறகும், நிரந்தர தீர்வு இல்லை. பல முறை தெரிவித்தும் தெருநாய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.மன்சூர் : 11 ஹைமாஸ் விளக்குகளில், 8 மட்டுமே சரி செய்யப்படுகிறது. திட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்கப்படாமல் உள்ளது.ராஜேந்திரன்: ஓட்டுபட்டறையில் தரமில்லாமல் மேற்கொண்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளை கையில் வைத்து, தரம் இல்லாமல் பணிகளுக்கு பணம் பெற்று செல்கின்றனர். ஓட்டுப்பட்டறை மூணு ரோடு பகுதியில் பயணிகள் நிழற்குடை குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. குருமூர்த்தி: சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி புகார் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. கமிஷனர்: இந்த சாலையில் முழுவதும் ஆக்கிரமிப்புகளாக உள்ளது; பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.