வீடுகட்ட அரசின் உத்தரவு கிடைத்தும் பயனில்லை; இடம் இல்லாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்.. தீராத துயரங்கள்...!
பந்தலுார்; கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட உத்தரவு கிடைத்தும், இடம் இல்லாமல் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் குரும்பர், பெட்ட குரும்பர், பணியர் சமுதாய மக்கள் வறுமை கோட்டில் வாழ்ந்து வருகின்றனர். அதில், சில இளைய தலை முறையினர் பட்டப்படிப்பு வரை நிறைவு செய்தும், அவர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், போதிய வீடு வசதி இல்லாமல் குடிசைகளில் வாழும், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 963 வீடுகள் கட்ட உத்தரவு கடந்த, 2023--24, 2024--25-ம் நிதி ஆண்டுகளில், சேரங்கோடு, நெலாக்கோட்டை, மசினகுடி, ஸ்ரீ மதுரை, முதுமலை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தலா, 5.73 லட்சம் ரூபாய் செலவில், 963 வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில், பெரும்பாலான பகுதிகளில் பழங்குடி மக்களின் நிலங்கள், பிற சமுதாய ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி, அந்த இடங்களை தங்கள் பெயரில் இடமாற்றம் செய்து உள்ளதுடன், அரசின் இலவச வீட்டு மனை பட்டாவும் பெற்று பயனாளிகளாக உள்ளனர். இடமில்லாமல் அவதி பழங்குடியினருக்கு, போதிய கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவு இல்லாத நிலையில், கடந்த காலங்களில் இவர்களின் நிலங்கள் பல்வேறு வகையிலும் பறிபோய் உள்ளது. தற்போது, இவர்களின் வசிக்கும் பகுதியில் நடப்பதற்கு நடைபாதை இல்லாமலும், வீடு கட்ட இடமில்லாமலும் தவித்து வருகின்றனர். இதனால், வீடு கட்ட உத்தரவு கிடைத்தும், வீடு கட்ட முடியாத சூழலில் தவித்து வருகின்றனர். தற்போது, புஞ்சைகொல்லி காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் இடமில்லாமல் தவித்த நிலையில், பழங்குடியினர் நல தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து குழிவயல் பகுதியில் மாற்றிடம் கொடுத்தனர். அந்த இடம் வருவாய் துறை கணக்கில் இருந்து தற்போது பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றி உள்ளதால், அங்கும் வீடு கட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் மவுனம் நாச்சேரி பகுதியில் வீடு கட்ட பொருட்கள் கொண்டு செல்ல பாதை அடைக்கப்பட்டதால், அங்கும் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. வெள்ளரி, மண்டாக்குனி பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கும் வீடு கட்ட இடம் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர். மண்ணின் மைந்தர்கள் என்று போற்றப்படும், 10 கிராம பழங்குடியின மக்களுக்கு, வீடு கட்ட இடம் இல்லாமல் தவித்து வரும் அவலம் குறித்து மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து வருவதால், பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளின் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் சிக்கி, வசிக்க மண் இல்லாமல் மறைந்து போகும் சூழலில் தவிக்கின்றனர். காட்டு நாயக்கர் சமுதாய தலைவர் சந்திரன் கூறுகையில், ''பழங்குடியின மக்களின் நிலங்களை பலரும் கையகப்படுத்தி சொந்தம் கொண்டாடும் நிலையில், எங்களுக்கு வீடு கட்ட கூட தற்போது இடமில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களை, ஒதுக்கிய சூழலிலும் அந்த இடங்கள் வருவாய் துறைக்கு தெரியாமலே, பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றப்பட்டதால் அங்கும் இடம் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்து எங்களை நிலங்களை மீட்டுத் தந்தால் பயனாக இருக்கும்,'' என்றார்.