தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை; விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஊட்டி; 'தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,'என, சிறு, குறு செய்தி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தேயிலைக்கு கட்டுபடியாகும் குறைந்த பட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் வழங்க வேண்டும்; குறிப்பாக கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு தற்போதைய விலை கிலோ ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, தேயிலை வாரியம் அறிவிக்கும் மாதாந்திர விலைக்கு குறையாமல். கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க 'இன்கோ சர்வ்' மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அக்., மாதத்திற்கான நிலுவைத் தொகை, 1.40 கோடி ரூபாயை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் , 'இன்கோசர்வ்' நிறுவனம் சீராக இயங்க அதற்கு நிரந்தர நிர்வாக இயக்குனர் நியமிக்க வேண்டும். தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய, மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.