உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிர்ணய விலை வழங்காமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள்

நிர்ணய விலை வழங்காமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள்

குன்னுார்; குன்னுார் தேயிலை வாரியம் அறிவித்த பசுந்தேயிலை நிர்ணய விலையை வழங்காமல், விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.குன்னுாரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் 'இன்கோசர்வ்' அமைப்பினர் கீழ், 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் பல தொழிற்சாலைகள், தேயிலை வாரியம் அறிவிக்கும் பசுந்தேயிலைக்கான நிர்ணய விலையை அங்கத்தினர்களான விவசாயிகளுக்கு வழங்குவதில்லை.

முடங்கிய தொழிற்சாலைகள்

இந்நிலையில், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்த அக்., மாத விலையான, 24.49 ரூபாய் வழங்காமல் குறைத்து வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள நிலுவை தொகையை வழங்க கோரி கடந்த, 7 நாட்களாக அங்கத்தினர்கள், கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்குவதை நிறுத்தி உள்ளனர். இரண்டு சதவீத அங்கத்தினர்கள் மட்டும் இங்கு பசுந்தேயிலை வழங்கினாலும், தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை.கோடிக்கணக்கில் கடன் பெற்று, பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட இந்த தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடன் மற்றும் வட்டி செலுத்தும், கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு சுமையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அதிகாரிகள்; அமைச்சர் முன்னிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அக்., மாத விலை மட்டும் தாங்க...

விவசாய கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''ஆண்டிற்கு குறைந்தபட்சம், 40 லட்சம் கிலோ வரை ஒரு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் சுமார், 2 கோடி கிலோ பசுந்தேயிலை வழங்கப்பட்ட நிலையில், பல கோடி ரூபாய் நிலுவை தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த முழு தொகையை இத்தனை நாட்கள் விட்டு கொடுத்த நிலையில், அக்., மாதம் நிலுவை தொகையான, 1.60 கோடி ரூபாய் மட்டுமே கேட்கிறோம். அதனையும் கொடுக்க மறுப்பதால் போராட்டம் தொடர்கிறது,'' என்றனர்.'இன்கோசர்வ்' அதிகாரிகள் கூறுகையில், ''அக்., மாத விலையில் கிலோவிற்கு, 2 ரூபாய் வழங்க வேண்டும் என்பதற்காக அங்கத்தினர்கள் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால், நவ., மாத தொகை முழுமையாக வழங்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்ததன் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொகை வந்ததும் கொடுக்கப்படும். ஏற்கனவே, 8 கோடி ரூபாய் இது போன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கத்தினர்கள் இதனையும் புரிந்து கொண்டு, தேயிலை தொழிற்சாலைகளுக்கு இலை வழங்க வேண்டும். இதனால், அனைவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது அரசிடம் இருந்து உத்தரவு வந்த பின்பு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை