டாக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதில் ஆமை வேகம்! உயர் தர சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவிப்பு
ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உயர்தர சிகிச்சை பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். நீலகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் உடற் கூறு பிரிவு, உடலியல் பிரிவு, நோயியல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, மயக்கவியல், உயர் தொழில் நுட்ப பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனை திறப்புக்கு பின், தினமும் மாவட்டம் முழுவதிலிருந்து, 800க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பழங்குடியின மக்களுக்கு, 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறை
இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளில், 460 பேர் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 300 பேர் மட்டுமே பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, முக்கிய துறைகளில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை. இதனால், சில நேரங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கும் சூழல் உருவாகிறது. இது போன்ற காரணங்களால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளை நடத்தி வரும் நிலையில், மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்து வருவது பணியில் உள்ள டாக்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் நடந்த போராட்டம்
இதை தொடர்ந்து, 'தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்; இனி மேல் புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும்,' என, கோரிக்கை விடுத்து மருத்துவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். நீலகிரி மக்களின் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கனவு நனவாகியும் உயர் தர சிகிச்சை பெற முடியாமல், பலரும் மீண்டும் கோவை உட்பட வெளி மாவட்டத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மருத்துவகல்லுாரி முதல்வர் சரவணன் கூறுகையில், '' ஊட்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தேவை, பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் வாயிலாக மருத்துவத்துறை தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இனி அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.