தெங்குமரஹாடாவில் வெள்ளப்பெருக்கு; ஆபத்தான நிலையில் பரிசல் பயணம்
கோத்தகிரி; கோத்தகிரி தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், மக்கள் ஆபத்தான நிலையில், பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தெங்குமரஹாடா ஊராட்சியில் அமைந்துள்ளது. இங்கு கல்லம்பாளையம், அல்லிமாயார் மற்றும் சித்திரப்பட்டி உள்ளிட்ட குக்கிரமங்களில், மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக, கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்த பலர், அங்கு தங்கி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் இருந்து, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக, இந்த கிராமத்திற்கு சென்று வர வேண்டும். பல ஆண்டுகளாக கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில், மாயாற்றை கடக்க தண்ணீர் வரத்து குறையும் நேரங்களில், ஜீப் உள்ளிட்ட வாகனங்களிலும், பிற நாட்களில் பரிசலிலும் கிராமத்தை அடையலாம்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பரிசலில் மட்டுமே, ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மாயாற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவசர தேவைகளுக்கு மட்டும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள், ஆபத்தான நிலையில் பரிசலை பயன்படுத்தி வருகின்றனர்.