பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: பொதுமக்கள் அவதி
குன்னூர்-: குன்னூர் அருவங்காடு ஜெகதளா சாலையில் உருவாகிய திடீர் நீர்வீழ்ச்சியால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு ஆர்ச் முதல் ஜெகதளா விநாயகர் கோவில் முன்புறம் வரையுள்ள சாலை வெடிமருந்து தொழிற்சாலைக்கு உட்பட்டது. சமீபத்தில் ஜெகதளா பேரூராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்க இங்கு குழி தோண்டி, பெயரளவிற்கு மண் கொட்டி மூடப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இங்குள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அடித்து வரும் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையின் கற்கள் அடித்து செல்லப்பட்டதால் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். தொழிற்சங்கத்தினர் கூறுகையில், சாலையோரத்தில் உள்ள மழைநீர் கால்வாய், மாதந்தோறும் சீரமைப்பது போன்று மீண்டும் பணிகள் மேற்கொள்ளவும், சாலையை செப்பனிடவும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றனர்.