குன்னுார் பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை தவிப்பு சிகிச்சை அளித்த வனத்துறை
குன்னுார், ; குன்னுார் ஜெகதளா ஒசட்டி பகுதியில், காலில் பிளாஸ்டிக் பைப் சிக்கி, காயத்துடன் நடமாடி வந்த, காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குடியிருப்பு, தேயிலை தோட்ட பகுதிகளுக்கு காட்டெருமைகள் உணவு தேடி வந்து செல்கின்றன.இந்நிலையில், குன்னுார் ஜெகதளா அருகே ஒசட்டி, முத்தமாச்சேரி, ஆரோக்கியபுரம் பகுதிகளில், காட்டெருமை ஒன்றின் காலில் பிளாஸ்டிக் பைப் சிக்கி காயத்துடன் நடமாடி வருவதாக, வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில், முதுமலை வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.தொடர்ந்து காலில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் பைப் அகற்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.