பாறை நடுவே சிக்கி போராடிய கரடி; உயிருடன் மீட்ட வனத்துறை
கோத்தகிரி: -கோத்தகிரி கரிக்கையூர் பகுதியில் பாறை நடுவே சிக்கி, உயிருக்கு போராடிய கரடியை, வனதுறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்டனர். நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, கரிக்கையூர் பகுதியில், 300 அடி செங்குத்தான மலையின் மேல், இரு பாறைகளுக்கு நடுவில் கரடி சிக்கியுள்ளது. வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிய கரடியின் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் மற்றும் பிரேமானந்தன் ஆகியோருடன், மீட்பு ஊர்தி உதவியுடன், கீழ்கோத்தகிரி ரேஞ்சர் முத்துராஜ் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கால்நடை மருத்துவர் ராஜேஷ் மயக்க ஊசி செலுத்திய பின்பு, கயிறு கட்டி கரடியை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.