பந்தலுார் பகுதியில் கிருஷ்ண பருந்து வனத்துறை கண்காணிப்பு அவசியம்
பந்தலுார்,; பந்தலுார் பகுதியில் தற்போது கிருஷ்ண பருந்து அதிக அளவில் காணப்படுகிறது.தமிழக- கேரள எல்லையில் பந்தலுார் பகுதி அமைந்துள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் வந்து செல்லும் இடமாக அமைந்துள்ளது. வனங்கள் அழிப்பு, கட்டடங்கள் அதிகரிப்பு, கோடை காலத்தில் வனப்பகுதிகளில் தீ வைத்தல் போன்ற காரணங்களால் பலவகை பறவைகள் மற்றும் ஊர்வன வகைகளை காண முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கிருஷ்ண பருந்து தற்போது பந்தலுார் பகுதி சாலையோர வனங்களில் அதிக அளவு காணப்படுகிறது. 'விஷ்ணுவின் வாகனம்' என்று அழைக்கப்படும் இந்த பருந்து 'பிராமினி கழுகு' என்றும் அழைக்கப்படுகிறது.வனத்தின் அருகே, கால்நடைகளை வன விலங்குகள் உட்கொள்ளும் போது, விலங்குகள் மீதான கோபத்தில் இறந்த கால்நடைகள் மீது பூச்சி கொல்லி மருந்துகளை தெளிப்பதால், அவற்றை உட்கொள்ளும் இதுபோன்ற அரிய பறவைகளும் அழிந்து வருகிறது. இத்தகைய கிருஷ்ண பருந்து, மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவில் வந்து செல்வதால், இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.