உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானைகளிடமிருந்து உயிர் தப்பிய வன காவலர்கள்; இரண்டு வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

யானைகளிடமிருந்து உயிர் தப்பிய வன காவலர்கள்; இரண்டு வீடுகளை சேதப்படுத்திய யானைகள்

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கட்டை கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரண்டு ஆண் யானைகள் ஒன்றாக உலா வருகின்றன.அதில், கட்டை கொம்பன் யானை ரேஷன் கடை, சத்துணவு கூடம், வீட்டு சமையலறை ஆகியவற்றை சேதப்படுத்தி உணவு பொருட்களை உணவாக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.புல்லட் என்ற யானை மனிதர்களை பார்த்தால், ஓடி துரத்தி தாக்கும் குணம் கொண்டது. இரண்டு யானைகளும், மூலக்கடை மற்றும் பாதிரிமூலா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. வனத்துறையினர் இரண்டு யானைகளையும் விரட்ட முற்பட்டபோது, புல்லட் யானை வனத்துறையினரை நோக்கி ஆக்ரோசமாக துரத்தி உள்ளது.வனத்துறையினர் யானைகளிடமிருந்து தப்பி ஒரு வீட்டின் பின்புறம் சென்று பதுங்கியதால் உயிர் தப்பினர். இதனால், கோபம் அடைந்த இரண்டு யானைகளும், செந்தில் மற்றும் யோகராஜ் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தின. அத்துடன் வீட்டிற்குள் இருந்த பாத்திரங்களை வெளியே எடுத்து போட்டு மிதித்துள்ளன. தொடர்ந்து வனத்துறையினர் சப்தம் எழுப்பி இரண்டு யானைகளையும் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் விரட்டினர். இரண்டு யானைகளும் குடியிருப்புகளை ஒட்டிய புதரில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ