| ADDED : நவ 19, 2025 04:18 AM
கூடலுார்: முதுமலை மசினகுடியில், வன ஊழியர்கள் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போன, 'ரிவால்டா' என்ற காட்டு யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, 45, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. தொடர்ந்து, அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தனர். மயக்க ஊசி செலுத்தினால் உடல் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, யானை விரும்பி உண்ணக்கூடிய பழங்களை பயன்படுத்தி மசினகுடியில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, 2021 ஆக., மாதம் ரேடியோ காலர் பொருத்தி, சிக்கலா வனப்பகுதியில் விடுவித்தனர். ஆனால், 24 மணி நேரத்துக்குள் மீண்டும் யானை மசினகுடி பகுதிக்கு வந்து சேர்ந்தது. யானை மீண்டும் குடியிருப்பு மற்றும் சாலை ஓரங்களில் வருவதை தடுக்க, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில்,'வன ஊழியர்கள் அதன் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 'டிரோன்' கேமரா உதவியுடன் அதன் இருப்பிடத்தை தேடும் பணியும் நடந்து வருகிறது. வேறு பகுதிக்கு சென்ற யானை விரைவில், மீண்டும் வந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றனர்.