உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை வாகனத்தை கவிழ்த்த கொம்பன் ; இரவில் யானையிடமிருந்து உயிர் தப்பிய வன ஊழியர்கள்

வனத்துறை வாகனத்தை கவிழ்த்த கொம்பன் ; இரவில் யானையிடமிருந்து உயிர் தப்பிய வன ஊழியர்கள்

பந்தலுார் : பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில் இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரின் வாகனத்தை கொம்பன் யானை கவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலுார் அருகே தொண்டியாளம் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஒற்றை ஆண் யானை வந்துள்ளது. பொதுமக்கள் தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வனக்காவலர் மாரிதாஸ் தலைமையில் யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த மோகன்ராஜ், ரமேஷ்குமார், பாலச்சந்தர், லிவிங்ஸ்டார், சதீஷ்குமார் ஆகியோர் வனத்துறை வாகனத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.சாலையில் நின்றிருந்த யானை, வனத்துறை வாகனத்தை பார்த்ததும் துரத்தி வந்து தாக்கி வாகனத்தை கவிழ்த்தது. அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சப்தம் எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். யானை அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்றது. பின்னர், வாகனத்தை மீட்ட பொதுமக்கள், வாகனத்தில் இருந்து வன ஊழியர்களையும் மீட்டனர். அதில், ரமேஷ்குமாருக்கு வலது தோள்பட்டை பாதிக்கப்பட்டது. பாலச்சந்தர், லிவிங்ஸ்டார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு மேங்கோரேஞ்சு பகுதியில், கோவையில் இருந்து, கேரள மாநிலம் மானந்தவாடிக்கு சென்று கேரள அரசு பஸ் கண்ணாடியை இதே யானை உடைத்தது. வனத்துறை விசாரணை நடத்தினர். மக்கள் கூறுகையில்,'இந்த யானை ஏற்கனவே நெலாக்கோட்டை என்ற இடத்தில், நான்கு தனியார் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன், கடந்த வாரம் சேரம்பாடி வனத்துறை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது.யானை, நள்தோறும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி வரும் நிலையில், இரவில் வாகனங்களில் செல்லும்போது அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை